சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் |
பன்னிரெண்டாம் திருமுறை |
முதற் காண்டம் |
5. திருநின்ற சருக்கம் |
5.1 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் |
1271
திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ
வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ்
பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில்
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன். |
1 |
1272
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச்
சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள்
மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு. |
2 |
1273
புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின்
கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர்
இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும்
வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும். |
3 |
1274
காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன்
பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு
சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர்
மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை. |
4 |
1275
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன்
புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப
உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும். |
5 |
1276
கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட
மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப்
பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க
நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம். |
6 |
1277
நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல்
பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித்
துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை
நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால். |
7 |
1278
மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும்
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல்
வரு மேனிச் செங்கண் வரால் மட முட்டப் பால் சொரியும்
கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி. |
8 |
1279
மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச்
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப
மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை
வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை. |
9 |
1280
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல்
பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும்
வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி
மயில் குலமும் முகல் குலமும் மாறாட மருங்கு ஆடும். |
10 |
1281
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி
அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும்
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில்
சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு. |
11 |
1282
இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும்
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள்
சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால்
தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர். |
12 |
1283
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி
ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம்
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள். |
13 |
1284
மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும்
அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும்
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும்
கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள். |
14 |
1285
தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண்
விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண்
குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும். |
15 |
1286
அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார்
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார்
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார்
திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார். |
16 |
1287
புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண்
மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில்
திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார். |
17 |
1288
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின்
அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின்
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார். |
18 |
1289
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார்
காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள்
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன்
ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார். |
19 |
1290
மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும்
தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின்
பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த
சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார். |
20 |
1291
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால்
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம்
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார். |
21 |
1292
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின்
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர்
மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார்
பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார். |
22 |
1293
ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார்
காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார்
பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள
வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார். |
23 |
1294
அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு
மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக்
குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார். |
24 |
1295
கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார்
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன்
மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல்
அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார். |
25 |
1296
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில்
காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார். |
26 |
1297
ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த
தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை
மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத்
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார். |
27 |
1298
மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்
சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப்
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார். |
28 |
1299
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின்
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த
காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால்
பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார். |
29 |
1300
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து
பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார்
மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார்
பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார். |
30 |
1301
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய்
அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத்
தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச்
செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார். |
31 |
1302
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள்
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால்
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய
வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார். |
32 |
1303
அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன்
என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார். |
33 |
1304
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி
இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார். |
34 |
1305
மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித்
தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க்
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால்
ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார். |
35 |
1306
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும்
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர்
யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார். |
36 |
1307
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின்
நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார். |
37 |
1308
பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி
மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்
கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார். |
38 |
1309
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம்
பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத்
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத்
தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார். |
39 |
1310
அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில்
சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண்
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய
வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார். |
40 |
1311
அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச்
செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும்
தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ
நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார். |
41 |
1312
பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால்
ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார்
நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும்
சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார். |
42 |
1313
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக்
குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம்
அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால்
துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார். |
43 |
1314
புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப்
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார். |
44 |
1315
நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில்
கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார்
கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு
மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து. |
45 |
1316
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை
ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை
ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள
வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால். |
46 |
1317
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும்
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச்
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப்
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார். |
47 |
1318
மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார்
உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான்
முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்
அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வான் என அருளி. |
48 |
1319
பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும்
தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக்
கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால். |
49 |
1320
அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது
வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம்
கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப்
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார். |
50 |
1321
அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும்
விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம்
நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார். |
51 |
1322
அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக்
கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார்
தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார். |
52 |
1323
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது
குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை
கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும்
பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார். |
53 |
1324
தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி
ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய்
ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப்
போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று. |
54 |
1325
குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப்
பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக்
கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த. |
55 |
1326
ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார்
பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத்
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான். |
56 |
1327
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை
எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த
நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான். |
57 |
1328
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து
நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம்
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய
அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான். |
58 |
1329
அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச்
செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என. |
59 |
1330
எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி
அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத்
தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார். |
60 |
1331
பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து
கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண்
செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார். |
61 |
1332
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக்
குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று
இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில்
திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார். |
62 |
1333
வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர்
இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது
உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து. |
63 |
1334
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது
கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது
மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார். |
64 |
1335
மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும்
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர்
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர்
பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார். |
65 |
1336
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து
சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக்
குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார். |
66 |
1337
திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப
பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு
உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி
தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார். |
67 |
1338
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும்
மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய்
சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார். |
68 |
1339
திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக
வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித்
தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால்
உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார். |
69 |
1340
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன்
நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை
மருளும் பிணி மாயை அறுத்திடுவான்
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என
நீடிய கோதில் திருப்பதிகம்
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம்
போமாறு எதிர் நின்று புகன்றனரால். |
70 |
1341
மன்னும் பதிகம் அது பாடியபின்
வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான்
அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும்
அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச்
செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம்
திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர்
முன் நின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன் கருணைக் கடல் மூழ்கினாரே. |
71 |
1342
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம்
அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப்
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப்
புவி மீது விழுந்து புரண்டு அயர்வார்
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு
அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின்
தங்கும் கருணைப் பெரு வெள்ளம்
இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார். |
72 |
1343
பொய் வாய்மை பெருக்கிய புன்
சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து
எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறும் குழல் மா மலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்
இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு
எதிர்செய் குறை என் கொல் எனத் தொழுவார். |
73 |
1344
மேவுற்ற இவ் வேலையில்
நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப்
பதிகத் தொடைபாடிய பான்மையினால்
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும்
நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான்
இடையே ஒருவாய்மை எழுந்ததுவே. |
74 |
1345
இத்தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு
இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள்
சித்தம் திகழ் தீவினையேன் அடையும்
திருவோ இது என்று தெருண்டு அறியா
அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு
அருளும் கருணைத் திறமான அதன்
மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே
மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே. |
75 |
1346
பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி
புன் தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா
அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ்
முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால்
நெடு மா கடல் என்ன நிறைந்துளதே. |
76 |
1347
மையல் துறை ஏறி மகிழ்ந்து
அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய் உற்ற திருப்பணி செய்பவராய்
விரவும் சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறா உணர்வும்
ஈறு இன்றி எழும் திருவாசகமும்
கையில் திகழும் உழவாரமுடன் கைக்
கொண்டு கலந்து கசிந்தனரே. |
77 |
1348
மெய்ம்மைப் பணி செய்த விருப்பு
அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில்
தம் இச்சை நிரம்ப வரம் பெறும்
அத் தன்மைப் பதி மேவியதா பதியார்
பொய்மைச் சமயப் பிணி விட்டவர்
முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா
எம்மைப் பணிகொள் கருணைத் திறம்
இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே. |
78 |
1349
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கைய வண்ணம்
பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில்
புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய். |
79 |
1350
தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார்
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார். |
80 |
1351
மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால்
நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக்
கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர்
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார். |
81 |
1352
இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி
மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு
சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம்
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார். |
82 |
1353
தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம்
பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு
எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார். |
83 |
1354
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர்
முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார். |
84 |
1355
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர்
கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார். |
85 |
1356
அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற
வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால்
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான். |
86 |
1357
கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால்
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு
உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச்
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார். |
87 |
1358
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து
புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே
கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான். |
88 |
1359
தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை
அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார்
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர். |
89 |
1360
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித்
தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப்
பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான். |
90 |
1361
அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி
பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார். |
91 |
1362
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து
மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார். |
92 |
1363
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின்
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத்
தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி
ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார். |
93 |
1364
ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி
வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார்
மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார். |
94 |
1365
பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை
வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச்
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார். |
95 |
1366
அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப்
பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித்
திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார். |
96 |
1367
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத்
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று
மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார். |
97 |
1368
வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம்
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே. |
98 |
1369
மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப்
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை
ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார். |
99 |
1370
ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப்
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும்
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர்
தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள். |
100 |
1371
ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர்
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே
ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார். |
101 |
1372
அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால்
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து
மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று
முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள். |
102 |
1373
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன்
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத்
தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப்
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார். |
103 |
1374
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே
செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார். |
104 |
1375
பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள்
முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால்
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ. |
105 |
1376
அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே
இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத்
தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார். |
106 |
1377
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர்
தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான்
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும்
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார். |
107 |
1378
மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும்
செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப
உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின்
கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார். |
108 |
1379
மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம்
கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப்
பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல்
கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான். |
109 |
1380
கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு
மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித்
தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின்
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம். |
110 |
1381
பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா
மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா
ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா
வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால். |
111 |
1382
இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில்
படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில்
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின்
முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே. |
112 |
1383
மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக்
கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச்
சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று
ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே. |
113 |
1384
பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர்
நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல்
ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார்
சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர். |
114 |
1385
அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு
விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச்
சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார். |
115 |
1386
வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்
வெம்ஞ்சுடர் மூவிலைச் சுல வீரட்டர் தம் அடியோம் நாம்
அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார். |
116 |
1387
தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக்
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம். |
117 |
1388
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத்
தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரிந்து
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே. |
118 |
1389
ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல
ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே. |
119 |
1390
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகித்
தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான். |
120 |
1391
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர்
பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப்
பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார். |
121 |
1392
அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான்
தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைவித்தவன் தன்னைச்
சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார். |
122 |
1393
ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப்
பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில்
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான். |
123 |
1394
அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த
வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர்
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர். |
124 |
1395
அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்
ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார். |
125 |
1396
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி
நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று
அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு
பற்றி உணர்வினால் பதிகம் பாடினார். |
126 |
1397
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்
அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு
அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக்
கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே. |
127 |
1398
அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத்
தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும்
தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர்
மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார். |
128 |
1399
இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட
அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்
ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ. |
129 |
1400
அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக்
கருணை நாவரசினைத் திரைக் கரங்களால்
தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட
வருணனும் செய்தனன் முன்பு மா தவம். |
130 |
1401
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில். |
131 |
1402
அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை
மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ
எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல்
தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே. |
132 |
1403
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன்
செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண்
கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார். |
133 |
1404
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும்
சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே. |
134 |
1405
மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி
வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால்
உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள்
செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார். |
135 |
1406
தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும்
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப்
பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின்
காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார். |
136 |
1407
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம்
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள
மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம்
தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார். |
137 |
1408
மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி
இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும்
தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார். |
138 |
1409
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார்
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப்
பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும்
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே. |
139 |
1410
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும்
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப்
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல்
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே. |
140 |
1411
கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால்
மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம்
உண்டாய்¢ன வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும்
தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே. |
141 |
1412
இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல
அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச்
செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே. |
142 |
1413
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே
எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று
தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார். |
143 |
1414
அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத்
தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம்
பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள். |
144 |
1415
புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து
வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான். |
145 |
1416
வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப்
பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான். |
146 |
1417
இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு
மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல்
பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச்
சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார். |
147 |
1418
திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும்
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப்
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார். |
148 |
1419
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும்
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி
வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப்
பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார். |
149 |
1420
புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன்
தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார். |
150 |
1421
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து
முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத்
தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை
நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும். |
151 |
1422
நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற
ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோலில்
சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த. |
152 |
1423
ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத்
தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து
தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால்
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார். |
153 |
1424
தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப்
பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள்
பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும்
தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து. |
154 |
1425
வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள
தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவிடம்
கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல்
புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார். |
155 |
1426
ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து
தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார். |
156 |
1427
நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர்
நடம் ஆடிய திரு எல்லை பால்
மேவித் தலம் உற மெய்யில் தொழுத
பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும்
காவில் களி மயில் மகிழ் உற்று எதிர்
எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ்
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு
மருதத் தண்பணை வழி வந்தார். |
157 |
1428
முருகில் செறி இதழ் முளரிப்
படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும்
அருகில் செறிவனம் என மிக்குயர்
கழை அளவில் பெருகிட வளர் இக்குப்
பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன
பெரியோர் அவர் திருவடிக் கண்டு
உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன
என முன்புள வயல் எங்கும். |
158 |
1429
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை
வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்
பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை
பெருகித் தொடர்பிணி உறுபாசம்
பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை
பயில் சூழ் சினை மிசை குயில் கூவும்
செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு
திரு நந்தன வனம் எதிர் கண்டார். |
159 |
1430
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு
அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்
தவம் முன் புரிதலில் வரு தொண்டு
எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம்
இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம்
என வந்து எதிர் அரகர என்றே
சிவ முன் பயில் மொழி பகர் கின்றன
வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை. |
160 |
1431
அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும்
அவரும் தொழுது முன் அளிகூரும்
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும்
நிறை அன்பொடும் உரை தடுமாறச்
செஞ்சொல் திருமறை மொழி அந்தணர்
பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில்
பொலி நெடு மதில் சூழ் குடதிசை
மணி வாயில் புறம் வந்துற்றார். |
161 |
1432
அல்லல் பவம் அற அருளும் தவ முதல்
அடியார் எதிர் கொள அவரோடும்
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின்
வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார்
கல்வித் துறை பல வரு மா மறை முதல்
கரை கண்டு உடையவர் கழல் பேணும்
செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை
வளர் சிவமே நிலவிய திருவீதி. |
162 |
1433
நவ மின் சுடர் மணி நெடு மாலையும்
நறு மலர் மாலையும் நிறை திருவீதிப்
புவனங்களின் முதல் இமையோர்
தடமுடி பொருந்திய மணி போகட்டிப்
பவனன் பணி செய வருணன் புனல்
கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று
எவரும் தொழுது எழும் அடியார் திரு
அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள். |
163 |
1434
மேலம் பரதலம் நிறையும் கொடிகளில்
விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும்
கோலம் பெருகிய திருவீதியை முறை
குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு
ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம்
உறமெய் கொடு தொழுதுள்புக்கார். |
164 |
1435
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை
வலம் வந்து அலமரு வரை நில்லா
அளவில் பெருகிய ஆர்வத்து இடை
எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும்
புளகச் செறி நிரை விரவத் திருமலி
பொன் கோபுரம் அது புகுவார் முன்
களனில் பொலிவிடம் உடையார் நடநவில்
கனகப் பொது எதிர் கண்ணுற்றார். |
165 |
1436
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி
நிறை அம்பலம் நினைவுற நேரே
கூடும் படி வரும் அன்பால் இன்புறு
குணம் முன் பெறவரு நிலை கூடத்
தேடும் பிரமனும் மாலும் தேவரும்
முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா
ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம்
ஆரா வகை தொழுது ஆர்கின்றார். |
166 |
1437
கையும் தலை மிசை புனை அஞ்சலியன
கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும்
உடன் உருகும் பரிவின பேறு
எய்தும் மெய்யும் தரைமிசை
விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர்
ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால். |
167 |
1438
இத் தன்மையர் பல முறையும்
தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும்
அத்தன் திரு அருள் பொழியும்
கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம்
மெய்த் தன்மை யினில் விருத்தத்
திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
திரு நேரிசை மொழி பகர்கின்றார். |
168 |
1439
பத்தனாய்ப் பாட மாட்டேன்
என்று முன் எடுத்துப் பண்ணால்
அத்தா உன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்தவாறு என்று
இத்திறம் போற்றி நின்றே
இன் தமிழ் மாலைப் பாடி
கைத் திருத் தொண்டு செய்யும்
காதலில் பணிந்து போந்தார். |
169 |
1440
நீடிய மணியின் சோதி
நிறை திரு முன்றின் மாடும்
ஆடு உயர் கொடி சூழ் பொன்
தேர் அணி திரு வீதி உள்ளும்
கூடிய பணிகள் செய்து
கும்பிடும் தொழிலர் ஆகிப்
பாடிய புனித வாக்கின்
பணிகளும் பயிலச் செய்வார். |
170 |
1441
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க
அன்னம் பாலிக்கும் என்னும்
திருக் குறுந் தொகைகள் பாடித்
திரு உழவாரங் கொண்டு
பெருத்து எழு காதலோடும் பெரும்
திருத் தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர்
வெண்ணீற்று வண்டலாட. |
171 |
1442
மேவிய பணிகள் செய்து
விளங்குநாள் வேட்களத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச்
சென்று முன் வணங்கிப் பாடிக்
காவியம் கண்டார் மன்னும்
திருக்கழிப் பாலை தன்னில்
நாவினுக்கு அரசர் சென்று
நண்ணினார் மண்ணோர் வாழ. |
172 |
1443
சின விடை யேறுகைத் தோறும்
மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து
வன பவள வாய்திறந்து வானவர்க்கும்
தான் அவனே என்கின்றாள் என்று
அனைய திருப்பதிகம் உடன்
அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி
நினைவரியார் தமைப் போற்றி நீடு
திருப்புலியூரை நினைந்து மீள்வார். |
173 |
1444
மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை
சொரியும் கழிப் பாலை மழுங்கு நீங்கி
நனைச்சினை மென் குளிஞாழல்
பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர் தம் மனம் கோயில்
கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத்
தினைத்தனையாம் பொழுது மறந்து
உய்வேனோ எனப் பாடி தில்லை சார்ந்தார். |
174 |
1445
அரியானை என்று எடுத்தே
அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை
பிரியாத பெரிய திருத் தாண்டகச்
செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி
விரியா நின்று எவ் உலகும் விளங்கிய
பொன் அம்பலத்து மேலி ஆடல்
புரியா நின்றவர் தம்மைப் பணிந்து
தமிழால் பின்னும் போற்றல் செய்வார். |
175 |
1446
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா
எறிக்கும் எனும் சிறந்த வாய்மை
அருஞ்சொல் வளத் தமிழ் மாலை
அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சு உருகப் பொழி புனல்வார்
கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்
தம் செயலின் ஒழியாத திருப்பணியும்
மாறாது சாரும் நாளில். |
176 |
1447
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த
கழு மலத்தின் இருந்த செம்கண்
விடை உகைத்தார் திரு அருளால்
வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும்
அடைய நிறை சிவம் பெருக வளர்
ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த
உடை மறைப் பிள்ளையார் திருவார்த்தை
அடியார்கள் உரைப்பக் கேட்டார். |
177 |
1448
ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால்
அமுதம் உண்ட போதே
ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன்
எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல
காழி வரும் பெரும் தகை சீர்
கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர
வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு
மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த. |
178 |
1449
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி
அருள் முன் பெற்றுப்
பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி
புரண்டு வலம் கொண்டு போந்தே
எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திரு நாரையூர்
பணிந்து பாடிச் செல்வார். |
179 |
1450
தொண்டர் குழாம் புடை சூழத்
தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம்
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து
உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத்
தெண் திரைவாய்க் கல் மிதப்பில்
உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும்
வண் தமிழால் எழுது மறை மொழிந்த
பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார். |
180 |
1451
நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை
மடுத்து அருளி நேரே முன்னாள்
ஆண்ட அரசு எழுந்து அருளக்
கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும்
காண்டகைய பெரு விருப்புக் கைம்
மிக்க திரு உள்ளக் கருத்தினோடு
மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ
எழுந்து அருளி முன்னே வந்தார். |
181 |
1452
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு
உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப்
பணிந்தவர்தம் கரங்கள் பற்றி
எழுதரிய மலக்கையால் எடுத்து
இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மை
அழுது அழைத்துக் கொண்டவர்தாம்
அப்பரே என அவரும் அடியேன் என்றார். |
182 |
1453
அம்பிகை செம் பொன் கிண்ணத்து
அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு
அரசர் எனச் சிறந்த சீர்த்தி
எம் பெரு மக்களும் இயைந்த
கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம்
பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம். |
183 |
1454
பிள்ளையார் கழல் வணங்கப்
பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமை வணங்கப்
பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளம் நிறை காதலினால் ஒருவர்
ஒருவரில் கலந்த உண்மை யோடும்
வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார்
கழல் வணங்கும் விருப்பின் மிக்கார். |
184 |
1455
அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம்
அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருள் சமய முதல் சைவ நெறி தான்
பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம்
ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித்
தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று
செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே. |
185 |
1456
பண் பயில் வண்டு அறை சோலை சூழும்
காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு
விண் பணிய ஓங்கு பெரு விமானம்
தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச்
சண்பை வரு பிள்ளையார் அப்பர்
உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக்
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை
கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி. |
186 |
1457
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது
பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று
பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும்
பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி
அரிய வகை புறம் போந்து பிள்ளையார்
திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள்
போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில். |
187 |
1458
அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும்
அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில்
திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில்
மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி
மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு
விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார். |
188 |
1459
ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை
அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு
மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு
இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடு
திருக் குறுக்கை திரு நின்றி யூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார். |
189 |
1460
மேவு புனல் பொன்னி இருகரையும் சார்ந்து விடை
உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக்
காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்
கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி
பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப்
பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து
பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார். |
190 |
1461
ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற
அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து
மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும்
சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு
பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித்
தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும்
பூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிஉறு
கைத் தொண்டு போற்றிச் செய்வார். |
191 |
1462
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி
இடை மருதைச் சென்று எய்திஅன்பினோடு
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண்
தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப்
பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப்
போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து
செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு
எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார். |
192 |
1463
சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து
இருந்த சிவக் கொழுந்தை
குன்ற மகள் தன் மனக் காதல் குலவும்
பூசை கொண்டு அருளும்
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி
இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்து தமிழ்
மொழி மாலைகளும் சாத்துவார். |
193 |
1464
கோவாய் முடுகி என்று எடுத்துக்
கூற்றம் வந்து குமைப்பதன் முன்
பூவார் அடிகள் என்று அலைமேல்
பொறித்து வைப்பாய் எனப் புகன்று
நாவார் பதிகம் பாடுதலும்
நாதன் தானும் நல்லூரில்
வா வா என்றே அருள் செய்ய
வணங்கி மகிழ்ந்து வாகீசர். |
194 |
1465
நன்மை பெருகஅருள்
நெறியே வந்து அணைந்து நல்லூரின்
மன்னு திருத் தொண்டனார் வணங்கி
மகிழ்ந்து எழும் பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை
முடிகின்றோம் என்று அவர்தம்
சென்னி மிசைப் பாத மலர்
சூட்டினான் சிவபெருமான். |
195 |
1466
நனைந்தனைய திருவடி
என்தலைமேல் வைத்தார் என்று
புனையும் திருத்தாண்டகத்தால்
போற்றி இசைத்துப் புனிதர் அருள்
நினைந்து உருகி விழுந்து எழுந்து
நிறைந்து மலர்ந்து ஒழியாத
தனம் பெரிதும் பெற்று வந்த
வறியோன் போல் மனம் தழைத்தார். |
196 |
1467
நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால்
மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து
பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித்
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள். |
197 |
1468
கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும்
திருவாவூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப்
பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந்திரு நல்லூர்
ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார். |
198 |
1469
ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய்
வாளை பாய் புனல் பழனத் திருப் பழனம் மருங்கு அணைந்து
காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு
நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார். |
199 |
1470
அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்
ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார்
மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார்
செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர். |
200 |
1471
அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப்
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண. |
201 |
1472
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்
சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக்
கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப்
பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார். |
202 |
1473
காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார்
பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும்
வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால்
ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து. |
203 |
1474
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம்
பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு
தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக்
குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார். |
204 |
1475
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே
பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம்
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள
ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான். |
205 |
1476
தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத்
தாயகரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம்
மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம்
தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார். |
206 |
1477
தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி
எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார். |
207 |
1478
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க்
கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே
ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப்
பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான். |
208 |
1479
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது
இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க
வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர்
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள். |
209 |
1480
திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப்
பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து
பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார். |
210 |
1481
புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ்
அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை
நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார். |
211 |
1482
எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும்
தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத்
தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச்
செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார். |
212 |
1483
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த
ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து
சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று
கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார். |
213 |
1484
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது
பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள்
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு
செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார். |
214 |
1485
நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை
பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து
சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி
அல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி. |
215 |
1486
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர்
பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி
மேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக்
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார். |
216 |
1487
பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி
முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும்
திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார். |
217 |
1488
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம்
நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார்
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும்
சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார். |
218 |
1489
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால்
எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார். |
219 |
1490
பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால்
உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே
புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று
அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார். |
220 |
1491
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி
ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து
நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார். |
221 |
1492
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம்
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள்
தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப்
புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து. |
222 |
1493
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம்
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி
ஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு
பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார். |
223 |
1494
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின்
முன் தேவ ஆசிரியன் சார்ந்து
கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ
மயில் ஆலும் ஆரூராரைக்
கையினால் தொழாது ஒழிந்து கனி
இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்று
எய்து அரிய கை யறவால் திருப்பதிகம்
அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே. |
224 |
1495
மார் பாரப் பொழி கண்ணீர் மழை
வாரும் திருவடிவும் மதுரவாக்கில்
சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின்
மாலைகளும் செம் பொன் தாளே
சார்வான திருமனமும் உழவாரத்
தனிப்படையும் தாமும் ஆகிப்
பார் வாழத் திரு வீதிப் பணி செய்து
பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார். |
225 |
1496
நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப்
புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக்
கூடிய அன்பொடு காலங்களில்
அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடு இளம் பூதத்தினான் எனும்
பதிகம் முதலான பலவும் பாடி
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம்
கரைந்து உருகி நயந்து செல்வார். |
226 |
1497
நான் மறைநூல் பெருமை நமி நந்தி
அடிகள் திருத்தொண்டின் நன்மை
பான்மை நிலையால் அவரைப் பரமர்
திருவிருத்ததுள் வைத்துப் பாடி
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர்
அரன் நெறியில் நிகழும் தன்மை
ஆன திறமும் போற்றி அணி வீதிப்
பணி செய்து அங்கு அமரும் நாளில். |
227 |
1498
நீர் ஆரும் சடை முடியார் நிலவு
திரு வலி வலமும் நினைந்து சென்று
வார் ஆரும் முலை மங்கை உமை
பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக்
கார் ஆரும் கறைக் கண்டர் கீழ்
வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர்
தனில் மீண்டும் அணைந்தார் அன்றே. |
228 |
1499
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப்
பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள் முன்
சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து
மூவுலகும் களி கூர வரும் பெருமை
முறைமை யெலாம் கண்டு போற்றி
நாவினுக்குத் தனி அரசர் நயக்கு
நாள் நம்பர் திரு அருளினாலே. |
229 |
1500
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ
பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவி எழும்
காதல் புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு
தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப்
பொருப்பரையன் மடப் பாவை இடப்
பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார். |
230 |
1501
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார்
திருப்புகலி அதன் கண் நின்றும்
பன்னாகப் பூண் அணிவார் பயின்ற
திருப்பதி பலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர்
வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார்
திருமடத்தில் மேவும் காளை. |
231 |
1502
ஆண்ட அரசு எழுந்து அருளி அணி
ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும்
நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு
நீடு திருப்புகலூர் நோக்கி
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி
எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ
எழுந்து அருளி எதிரே சென்றார். |
232 |
1503
கரண்டமலி தடம் பொய்கைக் காழியர்
கோன் எதிர் அணையும் காதல் கேட்டு
வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி
வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர்
குழாம் இரு திறமும் சேர்ந்த போதில்
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி
அணைந்த போல் இசைந்த அன்றே. |
233 |
1504
திருநாவுக்கரசர் எதிர் சென்று
இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மை
பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார்
எதிர் வணங்கி அப்பரே நீர்
வரு நாளில் திருவாரூர் நிகழ்
பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற
அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில்
வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார். |
234 |
1505
சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும்
மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார்
முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை. |
235 |
1506
அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்
கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார். |
236 |
1507
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந்
தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக
நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார்
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில். |
237 |
1508
அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப்
பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார். |
238 |
1509
தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப்
பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு
மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார். |
239 |
1510
சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு
ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல்
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார். |
240 |
1511
அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும்
துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால்
மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள்
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில். |
241 |
1512
பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர்
உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண்
வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள
எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார். |
242 |
1513
ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம்
ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப்
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை
நீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார். |
243 |
1514
திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில்
விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார். |
244 |
1515
அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற
மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும்
முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார். |
245 |
1516
திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும்
வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார். |
246 |
1517
செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப்
பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக்
குங்குலியக் கலயனார் திருமத்தில் குறை அறுப்ப
அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள். |
247 |
1518
சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி
ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்து
கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று
தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார். |
248 |
1519
சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக்
கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து
வார்த்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன்
சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை. |
249 |
1520
வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும்
காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார். |
250 |
1521
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு
நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப்
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார். |
251 |
1522
சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி
வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார். |
252 |
1523
கைகள் குவித்துக் கழல் போற்றிக்
கலந்த அன்பு கரைந்து உருக
மெய்யில் வழியும் கண் அருவி
விரவப் பரவும் சொல் மாலை
செய்ய சடையார் தமைச் சேரார்
தீங்கு நெறி சேர்கின்றார் என்று
உய்யும் நெறித் தாண்ட தம் மொழிந்து
அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க. |
253 |
1524
முன்னாள் அயனும் திருமாலும்
முடிவும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணி வெற்பைப்
பூ நீர் மிழலையினில் போற்றிப்
பல் நாள் பிரியா நிலைமையினால்
பயிலக் கும்பிட்டு இருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில்
இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள். |
254 |
1525
சீரின் விளங்கும் திருத்தொண்டர்
இருந்து சில நாள் சென்று அதன் பின்
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும்
பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும்
பல மன் உயிர்கள் எல்லாம்
பாரின் மலிந்த இலம் பாட்டில்
படர் கூர் வறுமை பரந்ததால். |
255 |
1526
வையம் எங்கும் வற்கடம்
ஆய்ச் செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்
தமக்கும் நாவுக்கு அரசருக்கும்
கையில் மானும் மழுவும் உடன்
காணக் கனவில் எழுந்து அருளிச்
செய்ய சடையார் திருவீழி மிழலை
உடையார் அருள் செய்வார். |
256 |
1527
கால நிலைமையால் உங்கள்
கருத்தில் வாட்டம் உறீர் எனினும்
ஏல உம்மை வழி படுவார்க்கு
அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்து அருளிக்
குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார். |
257 |
1528
விண்ணின் நின்று இழிந்த விமானத்தின்
கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண் தகையார்
தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறும் காசு
படிவைத்து அருள நானிலத்தில்
எண்ணில் அடியார் உடன் அமுது
செய்து அங்கு இருந்தார் இருவர்களும். |
258 |
1529
அல்லார் கண்டத்து அண்டர் பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருகப்
பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு
பொழுதும் பறை நிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறு இட்டார்
துயர் கூர் வறுமை தொலைத்திட்டார். |
259 |
1530
ஈசர் மிழலை இறையவர் பால்
இமையப் பாவை திருமுலைப் பால்
தேசம் உய்ய உண்டவர் தாம்
திருமா மகனார் ஆதலினால்
காசு வாசியுடன் பெற்றார் கைத்
தொண்டு ஆகும் படிமையினால்
வாசி இல்லாக் காசு படி
பெற்று வந்தார் வாகீசர். |
260 |
1531
ஆறு சடை மேல் அணிந்து அருளும்
அண்ணல் வைத்த படிக் காசால்
ஈறு இலாத பொருள் உடைய
இருவர் உடைய திருமடங்கள்
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து
உண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவி போற்ற
இன்புற்று இருக்கும் அந் நாளில். |
261 |
1532
காலம் தவறு தீர்ந்து எங்கும்
கலி வான் பொழிந்த புனல் கலந்து
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி
உணவு பெருகி நலம் சிறப்ப
மூல அன்பர் இருவர்களும்
மொழி மாலைகளும் பல சாத்தி
நீல கண்டர் உறை பதிகள்
பிறவும் வணங்க நினைவுற்றார். |
262 |
1533
வாய்ந்த மிழலை மா மணியை
வணங்கிப் பிரியா விடை கொண்டு
பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப்
போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி
இசை வண் தமிழ்கள் புனைந்து போய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு
எல்லை இல்லாச் சீர்த்தியினார். |
263 |
1534
மன்றல் விரவு மலர்ப் புன்னை
மணம் சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறும் சிறு மடவார்
முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த
கோயில் புகுந்து வலம் கொண்டு
சென்று சேர்ந்தார் தென் புகலிக்
கோவும் அரசும் திரு முன்பு. |
264 |
1535
பரவை ஓதக் கழிக்கானல்
பாங்கு நெருங்கும் அப் பதியில்
அரவச் சடை அந்தணனாரை
அகில மறைகள் அர்ச்சனை செய்து
உரவக் கதவம் திருக் காப்புச்
செய்த அந்நாள் முதல் இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற
மணி நீள வாயில் வணங்குவார். |
265 |
1536
தொல்லை வேதம் திருக் காப்புச்
செய்த வாயில் தொடர் அகற்ற
வல்ல அன்பர் அணையாமை மருங்கு
ஓர் வாயில் வழி எய்தி
அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள்
தொழுவார் ஆம்படி கண்டு
எல்லை இல்லாப் பெரும் புகழார்
இதனை அங்குக் கேட்டு அறிந்தார். |
266 |
1537
ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி
ஆழித் தோணி புரத்து அரசர்
ஓங்கு வேதம் அருச்சனை செய்
உம்பர் பிரானை உள் புக்குத்
தேம்கா திருவோம் நேர் இறைஞ்சத்
திருமுன் கதவம் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பர் என
நீடும் திருநாவுக்கு அரசர். |
267 |
1538
உண்ணீர்மையினால் பிள்ளையார்
உரை செய்து அருள அதனாலே
பண்ணினேரு மொழியாள் என்று
எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு
நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர்
என்று பாடி இறைஞ்சுதலும். |
268 |
1539
வேத வளத்தின் மெய்ப் பொருளின்
அருளால் விளங்கும் மணிக் கதவம்
காதல் அன்பர் முன்பு திருக்
காப்பு நீங்கக் கலை மொழிக்கு
நாதர் ஞான முனிவருடன்
தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கு எழுந்த
தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும். |
269 |
1540
அன்பர் ஈட்டம் களி சிறப்ப
ஆண்ட அரசும் சிவக் கன்றும்
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி
எழுந்து உள் புகுந்து தம் பெருமான்
முன்பு பணிந்து போற்றி இசைத்துப்
பரவி மொழி மாலைகள் பாடி
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி
அரிதில் புறத்து அணைந்தார். |
270 |
1541
புறம்பு நின்று வாகீசர் புனிதர்
அருளால் இக் கதவம்
திறந்தும் அடைத்தும் செல்லும்
நெறி திருந்த மலையாள் திருமுலையில்
கறந்த ஞானம் குழைத்த அமுது
செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும்
வகை நீரும் பாடி அருளும் என. |
271 |
1542
சண்பை ஆளும் தமிழ் விரகர்
தாமும் திரு நாவுக்கரசர்
பண்பின் மொழிந்த உரை கொண்டு
பதிகம் பாடும் அவ்வளவில்
கண் பொற்பமைந்த நுதல்
காளகண்டர் அருளால் கடிதுடனே
திண் பொன் கதவம் திருக் காப்புச்
செய்து எடுத்த திருப் பாட்டில். |
272 |
1543
அது கண்டு உடைய பிள்ளையார்
தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து
இது நம் பெருமான் அருள் செய்யப்
பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார்
பாடித் தொழுது பணிவு உற்றார்
எதிர் பொன் திருவாயிலின் வழக்கம்
என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல். |
273 |
1544
அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு
அடியார் எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திட மெய்
பொழியும் கண்ணீர் பரந்து இழிய
எங்கும் நிகர் ஒன்று இல்லாத
இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெரும் தகையும்
அரசும் மடத்தில் நண்ணிய பின். |
274 |
1545
அரிதில் திறக்கத் தாம் பாட
அடைக்க அவர் பாடிய எளிமை
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது
அயர்ந்தேன் எனக் கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில்
ஒருபால் அணைந்து பேழ் கணித்து
மருவும் உணர்வில் துயில் கொண்டார்
வாய்மை திறம்பா வாகீசர். |
275 |
1546
மன்னும் செல்வ மறைக்காட்டு
மணியின் பாதம் மனத்தின் கண்
உன்னித் துயிலும் பொழுதின் கண்
உமை ஓர் பாகம் உடையவர் தாம்
பொன்னின் மேனி வெண் நீறு
புனைந்த கோலப் பொலிவினொடும்
துன்னி அவர்க்கு வாய் மூரில்
இருப்போம் தொடர வா என்றார். |
276 |
1547
போதம் நிகழ வா என்று
போனார் என் கொல் எனப் பாடி
ஈது எம்பெருமான் அருளாகில்
யானும் போவேன் என்று எழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு
விரைந்து போக அவர் முன்னே
ஆதி மூர்த்தி முன் காட்டும்
அவ் வேடத்தால் எழுந்து அருள. |
277 |
1548
சீரார் பதியின் நின்று எழுந்து
செல்லும் திருநாவுக்கு அரசர்
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண
எய்தா வாறே போல்
நீரார் சடையார் எழுந்து அருள
நெடிது பின்பு செல்லும் அவர்
பேராளரை முன் தொடர்ந்து அணையப்
பெறுவார் எய்தப் பெற்று இலரால். |
278 |
1549
அன்ன வண்ணம் எழுந்து அருளி
அணித்தே காட்சி கொடுப்பார் போல்
பொன்னின் கோயில் ஒன்று எதிரே
காட்டி அதனுள் புக்கு அருளத்
துன்னும் தொண்டர் அம் மருங்கு
விரைந்து தொடரப் போந்த படி
மன்னும் புகலி வள்ளலார் தாமும்
கேட்டு வந்து அணைந்தார். |
279 |
1550
அழைத்துக் கொடு போந்து அணியார்
போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே
திறப்பித் தேனுக்கே அல்லால்
உழைத்தாம் ஒளித்தால் கதவம்
தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார்
தாம் இங்கு எப்பால் மறைவது என. |
280 |
1551
மாட நீடு திருப்புகலி
மன்னர் அவர்க்கு மால் அயனும்
நேடி இன்னங் காணாதார்
நேரே காட்சி கொடுத்து அருள
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி
அரசும் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்று எடுத்துப்
பரமர் தம்மைப் பாடினார். |
281 |
1552
பாடும் தமிழ் மாலைகள் கொண்டு
பரமர் தாமும் எழுந்து அருள
நீடும் திருவாய்மூர் அடைந்து
நிலவும் கோயில் வலம் செய்து
சூடும் பிறையார் பெரும் தொண்டர்
தொழுது போற்றித் துதி செய்து
நாடும் காதல் வளர்ந்து ஓங்க
நயந்து அந் நகரில் உடன் உறைந்தார். |
282 |
1553
ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே
அங்கண் இனிது அமர்ந்து
பூண்ட காதல் பொங்கி எழ
வாய் மூர் அடிகள் போற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை
சாத்தி ஞான முனிவர் ஒடு
மீண்டு வந்து திருமறைக் காடு
எய்தி விமலர் தாள் பணிந்தார். |
283 |
1554
ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு
ஆன பணி செய்து அமரும் நாள்
சீத மதி வெண் குடை வளவர்
மகளார் தென்னன் தேவியாம்
கோதில் குணத்துப் பாண்டி மா
தேவியார் முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர் வந்தார்
புகலி வேந்தர் தமைக் காண. |
284 |
1555
வந்து சிவனார் திருமறைக் காடு
எய்தி மன்னு வேணுபுரி
அந்தணாளர் தமக்கு அறிவித்து
அவர் பால் எய்தி அடி வணங்க
சிந்தை மகிழ்ந்து தீது இன்மை
வனவத் தீங்கும் உளவாமோ
இந்த உலகம் உய வந்தீர்
இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார். |
285 |
1556
சைவ நெறி வைதிகம் நிற்கச்
சழக்கு நெறியைத் தவம் என்னும்
பொய் வல் அமணர் செயல் தன்னைப்
பொறுக்க கில்லோம் எனக் கேட்டே
அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி
ஆதிசைவ நெறி விளங்கத்
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர்
கொள் சண்பைத் திரு மறையோர். |
286 |
1557
ஆய பொழுது திரு நாவுக்கரசு
புகலி ஆண் தகைக்குக்
காய மாசு பெருக்கி உழல்
கலதி அமணர் கடுவினை செய்
மாயை சாலம் மிக வல்லார் அவர்
மற்று என்னை முன் செய்த
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்
இசையேன் யான் என்றார். |
287 |
1558
என்று கூற எல்லை இலா
நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்து உடையேன்
அங்குத் தீங்கு புரி அமணர்
நின்ற நிலைமை அழிவித்துச் சைவ
நெறி பாரித்து அன்றி
ஒன்றும் செய்யேன் ஆணை உமது
என்றார் உடைய பிள்ளையார். |
288 |
1559
போமா துணிந்து நீர் அங்குப்
போகப் போதா அவ் அமணர்
தீ மாயையினை யானே போய்ச்
சிதைத்து வருகின்றேன் என்ன
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை
மறுக்க மாட்டது அரசு இருப்பத்
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில்
போனார் ஞானத் தலைவனார். |
289 |
1560
வேணு புரக்கோன் எழுந்து அருள
விடைகொண்டு இருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில்
புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப்
பேணி இருந்து அங்கு உறையும் நாள்
பெயர்வார் வீழிமிழலை அமர்
தாணுவின் தன் செய்ய கழல்
மீண்டும் சார நினைக்கின்றார். |
290 |
1561
சோலை மறைக் காட்டு அமர்ந்து
அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய்
வேலை விடம் உண்டவர் வீழி மிழலை
மீண்டும் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம்
பிறவும் தாம் பணிந்து
சாலு மொழி வண் தமிழ்ப் பாடித்
தலைவர் மிழலை வந்து அடைந்தார். |
291 |
1562
வீழி மிழலை தனிப் பணிந்து
வேத முதல்வர் தாம் இருப்ப
ஆழி வலம் ஏந்திய அரியால்
ஆகாசத்தின் நின்று இழிந்த
வாழி மலர்ந்த கோயில்தனில்
மன்னும் பொருளை போற்றிசைத்துத்
தாழும் நாளில் பிறபதியும் பணியும்
காதல் தலை நிற்பார். |
292 |
1563
பூவில் பொலியும் புனல் பொன்னிக்
கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த
ஆவுக்கு அருளும் ஆவடு தண்
துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி
நாவுக் கரசர் ஞானப் போன
கர்க்குச் செம் பொன் ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றிப்
போந்து பிறவும் பணிகின்றார். |
293 |
1564
செய்ய சடையார் பழையாறை எய்த
அதனில் செல் பொழுதில்
மையல் அமணர் மறைத்த வடதளியின்
மன்னும் சிவ னாரைக்
கைகள் கூப்பித் தொழுது அருளக்
கண்டவாற்றால் அமணர்கள் தம்
பொய் கொள் விமானம் எனக் கேட்டுப்
பொறாத உள்ளம் மிகப் புழுங்கி. |
294 |
1565
அந்த விமானம் தனக்கு அருகா
ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக்
கந்தம் மலரும் கடிக் கொன்றை
முடியார் செய்ய கழல் உன்னி
மந்த அமணர் வஞ்சனையால்
மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தம் கொண்ட குண்டர் திறம்
பாற்றும் என்று பணிந்து இருந்தார். |
295 |
1566
வண்ணம் கண்டு நான் உம்மை
வணங்கி அன்றிப் போகேன் என்று
எண்ண முடிக்கும் வாகீசர்
இருந்தார் அமுது செய்யாதே
அண்ணலாரும் அது உணர்ந்து
அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ணமாக மன்னனுக்குக்
கனவில் அருளிச் செய்கின்றார். |
296 |
1567
அறிவில் அமணர் நமை மறைப்ப
இருந்தோம் என்று அங்கு அடையாளக்
குறிகள் அறியச் செய்து அருளி
நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமை அழித்து
நீக்கிப் போக்கு என்று அருள் புரிய
செறிவில் அறிவுற்று எழுந்து அவனும்
செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி. |
297 |
1568
கண்ட வியப்பு மந்திரிகட்கு
இயம்பிக் கூடக் கடிது எய்தி
அண்டர் பெருமான் அருள் செய்த
அடையாளத்தின் வழி கண்டு
குண்டர் செய்த வஞ்சணையைக்
குறித்து வேந்தன் குலவு பெரும்
தொண்டர் தம்மை அடி வணங்கித்
தொக்க அமணர் தூர் அறுத்தான். |
298 |
1569
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண்
ஆயிரமும் மாய்ந்தற் பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம்
ஆக்கி விளக்கியபின்
ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு
நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச
ஞான அரசும் புக்கு இறைஞ்சி
நாதர் முன்பு போற்றுவார். |
299 |
1570
தலையின் மயிரைப் பறித்து உண்ணூம்
சாதி அமணர் மறைத்தாலும்
நிலை இலாதார் நிலைமையினால்
மறைக்க ஒண்ணுமோ என்னும்
விலை இல் வாய்மைக்குறும் தொகைகள்
விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே
இலை கொள் சூலப் படையார் சேர்
இடங்கள் பிறவும் தொழ அணைவார். |
300 |
1571
பொங்கு புனலார் பொன்னியில்
இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித்
தமிழ் மாலைகளும் சாத்திப் போய்
எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறில்
தொண்டர் எதிர் கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக்
காவின் மருங்கு சென்று அணைந்தார். |
301 |
1572
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச்
செஞ்சொல் மாலை பல பாடி
இலங்கு சடையார் எறும்பியூர்
மலையும் இறைஞ்சி பாடியபின்
சோதித் திருச்சிராப்பள்ளி
மலையும் கற்குடியும்
நலம் கொள் செல்வத் திருப்பராய்த்
துறையும் தொழுவான் நண்ணினார். |
302 |
1573
மற்றப் பதிகள் முதலான
மருங்கு உள்ளனவும் கை தொழுது
பொன் புற்று அமைந்த திருப்பணிகள்
செய்து பதிகம் கொடு போற்றி
உற்ற அருளால் காவிரியை
ஏறி ஒன்னார் புரம் எரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச்
சென்று சேர்கின்றார். |
303 |
1574
வழி போம் பொழுது மிக இளைத்து
வருத்தம் உற நீர் வேட்கையொடும்
அழிவாம் பசி வந்து அணைந்திடவும்
அதற்குச் சித்தம் அலையாதே
மொழி வேந்தரும் முன் எழுந்து
அருள முருகு ஆர் சோலைப் பைஞ்ஞீலி
விழி ஏந்திய நெற்றியினார் தம்
தொண்டர் வருத்தம் மீட்பாராய். |
304 |
1575
காவும் குளமும் முன் சமைத்துக்
காட்டி வழி போம் கருத்தினால்
மேவும் திருநீற்று அந்தணராய்
விரும்பும் பொதி சோறும் கொண்டு
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே
நண்ணி இருந்தார் விண்ணின் மேல்
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி
ஏனமும் காண்பு அரியவர் தாம். |
305 |
1576
அங்கண் இருந்த மறையவர் பால்
ஆண்ட அரசும் எழுந்து அருள
வெங்கண் விடை வேதியர் நோக்கி
மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர்
இங்கு என் பாலே பொதி சோறு
உண்டு இதனை உண்டு தண்ணீர் இப்
பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப்
போக்கிப் போவீர் எனப் புகன்றார். |
306 |
1577
நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர்
அருள் என்று அறிந்தார் போல்
உண்ணும் என்று திருமறையோர்
உரைத்துப் பொதி சோறு அளித்தலுமே
எண்ண நினையாது எதிர் வாங்கி
இனிதாம் அமுது செய்து இனிய
தண்ணீர் அமுது செய்து அருளித்
தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார். |
307 |
1578
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி
இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர் போவது என்றார்
அரசும் அவர்க்கு எதிரே
செப்புவார் யான் திருப்பைஞ்
ஞீலிக்குப் போவ என்று உரைப்ப
ஒப்பு இலாரும் யான் அங்குப்
போகின்றேன் என்று உடன் போந்தார். |
308 |
1579
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம்
ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப்
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில் வித்தார். |
309 |
1580
பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி
மைஞ் ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து
மெய்ஞ் ஞீலிர் மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக்
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார். |
310 |
1581
நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும்
காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடி
மாதோர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார். |
311 |
1582
செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத் தொழுது வலம் கொண்டு
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும்
அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார். |
312 |
1583
அண்ணாமலை மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம்
கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து எழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தை உடன்
பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார். |
313 |
1584
பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம் போற்றிப் பணி செயும் நாள்
மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும்
தணியாக் காதலுடன் சென்று வணங்கித் தக்க பணி செய்வார்
அணியார் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார். |
314 |
1585
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும்
சூதமலி தண் பணைப் பதிகன் பலவும் கடந்து சொல்லிக்கு
நாதர் போந்து பெரும் தொண்டை நன்னாடு எய்தி முன் ஆகச்
சீத மலர் மென் சோலை சூழ் திரு ஒத்தூரில் சென்று அடைந்தார். |
315 |
1586
செக்கர் சடையார் திரு ஒத்துத்தூர் தேவர் பிரானார் தம் கோயில்
புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல் பொழிய
முக் கண் பிரானை விரும்பும் மொழித் திருத் தாண்டகங்கள் முதலாகத்
தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்து ஒழுகுவார். |
316 |
1587
செய்ய ஐயர் திரு ஒத்தூர் ஏத்திப் போந்து செழும் புவனம்
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கித்
தையல் தழுவக் குழைந்த பிரான் தங்கும் தெய்வப் பதி என்று
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தா. |
317 |
1588
ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர் தம் பேர் அருளினால்
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம்
சால மலர்ந்து களி சிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார். |
318 |
1589
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள்
நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொற்குடம் தீபம்
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிந்£ள் காஞ்சி அலங்கரித்தார். |
319 |
1590
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால்
கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும்
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர் கொண்டார். |
320 |
1591
எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளி
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வானநதி
குதி கொண்டு இழிந்த சடைக் கம்பர் செம் பொன் கோயில் குறுகினார்
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர். |
321 |
1592
திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்து
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து
வருவார் செம் பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மணி மேனிப்
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார். |
322 |
1593
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்பச்
சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பர் தமை
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார். |
323 |
1594
கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப்
பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின்
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்
அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார். |
324 |
1595
கையார்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும்
செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி
மையார்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு
மெய்யார்வம் உறத் தொழுது விருப்பினோடு மேவு நாள். |
325 |
1596
சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேல் தளி முதலாம்
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள்
ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால்
சார்வுறு மாலைகள் சாத்தித் தகும் தொண்டு செய்திருந்தார். |
326 |
1597
அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண்
மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச்
சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால். |
327 |
1598
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப்
பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின்
ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார். |
328 |
1599
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார்
நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார்
வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டு இடை போய்ப்
பருக்கைத் திண் களிற்று உரியார் கழுக் குன்றின் பாங்கு அணைந்தார். |
329 |
1600
நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப்
பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்
சூடும் இனம் பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய்
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார். |
330 |
1601
திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்த அன்பினொடும்
பெரு வாய்மைத் தமிழ்பாடி அம் மருங்கு பிறப்பு அறுத்துத்
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர்
மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார். |
331 |
1602
வரை வளர் மா மயில் என்ன மாடமிசை மஞ்சாடும்
தரை வளர் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளி
திரை வளர் வேலைக் கரை போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார். |
332 |
1603
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி
நற்கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப்
பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர். |
333 |
1604
திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு
ஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார்
கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார். |
334 |
1605
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத்
தொழுத ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம்
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார். |
335 |
1606
வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப்
பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார்
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம்
கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார். |
336 |
1607
விளங்கு பெருந் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே
உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக் குறுந் தொகைகள்
களங்கொள் திரு நேரிசைகள் பல பாடிக் கை தொழுது
வளங்கொள் திருப் பதியம் தனில் பல நாள்கள் வைகினார். |
337 |
1608
அங்குறையும் நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள்
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால்
பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள்
பங்குடையார் அமர்ந்திருப் பாசூராம் பதி அணைந்தார். |
338 |
1609
திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும்
விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய
இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப்
பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார். |
339 |
1610
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச்
சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும்
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி
எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர். |
340 |
1611
அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின்
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச்
செம்மையினால் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார். |
341 |
1612
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின்
ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப்
பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும்
மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார். |
342 |
1613
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார்
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரிக் கரை பணிந்து
தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம்
மல்கு திருக் காளத்தி மா மலை வந்து எய்தினார். |
343 |
1614
பொன் முகலித் திருநதியின் புனித நெடும் தீர்த்தத்தில்
முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில்
சென்னி உறப் பணிந்து எழுந்து செம் கண் விடைத் தனிப்பாகர்
மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார். |
344 |
1615
காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும்
காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய்
நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார். |
345 |
1616
மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும்
சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி
அலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத்
தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார். |
346 |
1617
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து
தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால்
பேணிதிருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம்
காணுமது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார். |
347 |
1618
அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப்
பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்போடு போதுவார்
துங்க மால் வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால் விடை அண்ணல் மேவும் திருப் பருப்பதம் எய்தினார். |
348 |
1619
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும்
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார். |
349 |
1620
அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படைச்
செம்மல் வெண் கயிலைப் பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால்
எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர்
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார். |
350 |
1621
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும்
திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும்
பெரு நலம் கிளர் நாடும் எண்ணில பின்படப் பொற்பினால்
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார். |
351 |
1622
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய்
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல்
பங்கயப் பழனத்து மத்திய பை திரத்தினை எய்தினார். |
352 |
1623
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும்
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன்
பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய்
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார். |
353 |
1624
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால்
போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச்
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர்
ஏகினார் இரவும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார். |
354 |
1625
ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன்
தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால்
வாய நாக மணிப் பணங் கொள் விளக்கு எடுத்தன வந்து
தோய வானவராயினும் தனி துன் அருஞ்சுரம் முன்னினார். |
355 |
1626
வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்யவன் கதிர் கை பரந்து
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன
பொங்கழற்று எறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும் பகல்
செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார். |
356 |
1627
இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் அரும் சுரம் எய்துவார்
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும்
மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார். |
357 |
1628
கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின்
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட
மொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்த முயங்கியே
மை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால். |
358 |
1629
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட
நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடு
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் உடம்பு அடங்கம் ஊன் கெடச்
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர். |
359 |
1630
அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால்
மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும்
தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார். |
360 |
1631
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்
மன்னும் தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த
நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவராம் படியால். |
361 |
1632
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார். |
362 |
1633
மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்
தேசுடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ
ஆசில் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப்
பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர். |
363 |
1634
வண்டுலாங் குழல் மலை மகளுடன் வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்
கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற. |
364 |
1635
கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால்
வெயில் கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி. |
365 |
1636
மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும்
தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார். |
366 |
1637
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்தவர் தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால்
ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார். |
367 |
1638
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே
விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே
கண்ணினால் திருக் கயிலையில் இருந்த நின் கோலம்
நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார். |
368 |
1639
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில்
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை
பழுதில் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார். |
369 |
1640
ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி
ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப்
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால். |
370 |
1641
ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார்
போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கி
மாதோர் பாகனார் மகிழும் ஐ ஆற்றில் ஓர் வாவி
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகெலாம் வியப்ப. |
371 |
1642
வம்புலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி
உம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார்
எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண்
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார். |
372 |
1643
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார்
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார். |
373 |
1644
பொன் மலைக் கொடியுடன் அமர்வெள்ளியம் பொருப்பில்
தன்மை ஆம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார். |
374 |
1645
காணும் அப்பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப்
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர்
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத்
தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க. |
375 |
1646
தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக்
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும்
தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப. |
376 |
1647
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள்
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்சப்
பொங்கியங்களால் பூத வேதாளங்கள் போற்ற. |
377 |
1648
அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர்
சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக. |
378 |
1649
வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும்
தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப்பாகம்
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார். |
379 |
1650
கண்ட ஆனந்தக் கடவினைக் கண்களால் முகந்து
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார். |
380 |
1651
முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப்
பொன் பிறங்கிய சடையாரைப் போற்று தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர். |
381 |
1652
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புறக் கயிலை
மேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளித்
தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம்
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ. |
382 |
1653
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர்
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச்
செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து
வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து. |
383 |
1654
மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார். |
384 |
1655
கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக்
கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர். |
385 |
1656
நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக
மாடுயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித்
தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார். |
386 |
1657
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர் உறும் தன்மையர் ஆனார். |
387 |
1658
திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப்
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப
இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி. |
388 |
1659
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று
பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார். |
389 |
1660
பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும்
செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு
எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார். |
390 |
1661
பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர் இருப்பக்
கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத்
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார். |
391 |
1662
தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் எனப்
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார். |
392 |
1663
சண்பை வருந் தமிழ் விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு
மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து
கண் பெருகுங் களிகொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால்
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார். |
393 |
1664
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார்
சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி
வாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார். |
394 |
1665
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி
அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின்
சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச்
சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து இலரால். |
395 |
1666
திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்கு
அருகுகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும்
பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார். |
396 |
1667
பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே
உள்ளமிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத்
துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார். |
397 |
1668
கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச்
செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின்
மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள்
தொழுது உருகி இன்புற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார். |
398 |
1669
வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால்
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில்
எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர்
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர். |
399 |
1670
பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும்
நண்புடைய குலச் சிறையார் பெருமையும் ஞானத் தலைவர்
எண் பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர்
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார். |
400 |
1671
பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில்
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு
உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப்
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார். |
401 |
1672
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும்
பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க்
காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம்
தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார். |
402 |
1673
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள்
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்
முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார். |
403 |
1674
எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச்
செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்
கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார். |
404 |
1675
சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின்
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே
பார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று
ஆரகிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார். |
405 |
1676
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல்
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான
பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார். |
406 |
1677
கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள்
நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி
வடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார். |
407 |
1678
தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த
பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி
துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர். |
408 |
1679
தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து
மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால்
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி
நாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார். |
409 |
1680
அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப்
பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி
செங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம்
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார். |
410 |
1681
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி
வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும்
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள்
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார். |
411 |
1682
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப்
பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே
பூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார். |
412 |
1683
பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி
நையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில்
கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன்
வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார். |
413 |
1684
நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும்
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும்
கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும்
துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார். |
414 |
1685
ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும்
பார் பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும்
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார். |
415 |
1686
அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர்
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில்
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார். |
416 |
1687
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும்
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க
எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி
வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார். |
417 |
1688
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த
நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால்
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார். |
418 |
1689
வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து
தான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மை
கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப்
பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார். |
419 |
1690
கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப்
பொற்புறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார். |
420 |
1691
ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க
ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார். |
421 |
1692
இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய
அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும்
மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம்
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார். |
422 |
1693
இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர்
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று
பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார். |
423 |
1694
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக்
காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும்
பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரைப் பெயர்விக்க
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார். |
424 |
1695
இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த
மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர்
மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும்
அந்நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார். |
425 |
1696
மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன்
என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார். |
426 |
1697
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று
நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி
அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார். |
427 |
1698
வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின்
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில். |
428 |
1699
அடியன் ஏன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப்
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன்
கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார்
முடிவில் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன். |
429 |
திருச்சிற்றம்பலம் |